ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு


ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு
x

கோப்புப்படம்

ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த பவாரியா கொள்ளையர்கள் 5 பேர், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது. அவரது மனைவி, மகன்களை கொடூரமாக தாக்கி, 62 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளையர்களை முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்று தேடி பிடித்து கைது செய்தனர். 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பவாரியார கொள்ளையன் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.

மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டு, ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

1 More update

Next Story