தேன் குடிக்க சென்று 300 அடி உயர மலையில்.. பாறைகளுக்கு நடுவே சிக்கிய கரடி


தேன் குடிக்க சென்று 300 அடி உயர மலையில்.. பாறைகளுக்கு நடுவே சிக்கிய கரடி
x

300 அடி உயர செங்குத்தான மலை பகுதியில் உள்ள தேனை எடுத்து குடிக்க கரடி ஒன்று ஏறி சென்றுள்ளது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கரிக்கையூர் பழங்குடியின கிராமம். இந்தநிலையில் நேற்று மாலை இந்த கிராம பகுதியில் சுமார் 300 அடி உயர செங்குத்தான மலை பகுதியில் உள்ள தேனை எடுத்து குடிக்க கரடி ஒன்று ஏறி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கரடி அங்குள்ள 2 பாறைகளுக்கு இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது.

இதனை சிறிதுநேரம் கழித்து அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சோலூர் மட்டம் வனத்துறையினர் கண்டு உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் 10 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கரடியை மீட்க முடியாததால் அதற்கு மயக்க ஊசி செலுத்தி, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்பது என முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து கரடிக்கு கால்நடை டாக்டர் மயக்க ஊசி செலுத்திய சிறிதுநேரத்தில் கரடி மயக்க நிலைக்கு சென்றது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் செங்குத்தான மலையில் கரடி சிக்கிய பாறையில் கயிறு கட்டி இறங்கி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கரடியை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் கரடிக்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதியையொட்டி விடப்பட்டது. தொடர்ந்து மயக்கம் தெளிந்த கரடி வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story