

வெலிங்டன்,
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபக லமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரடி கள் பகல் நேரங்களில் நகரப்பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதை கண்டு குன்னூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று குன்னூர் அருகே கரிமரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. தேயிலைச்செடிகளுக்கு இடையே கரடி நடமாடுவதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கரடி பிரதான சாலை வழியாக சென்றது.
குன்னூர் ஒட்டுப்பட்டறை என்ற இடத்தில் வீட்டின் மொட்டை மாடியில் ஏறிய கரடி சாவகாசமாக நடந்து சென்றது. இதை வீடியோ பதிவு செய்தவர், அந்த வீட்டில் இருப்பவர்களை நோக்கி கரடி வருகிறது. கதவை மூடி கொள்ளுங்கள் என்று சத்தம் போட்டார். அந்த கரடி மொட்டை மாடியில் நடந்து சென்று இரும்பு படிக்கட்டு வழியாக இறங்கி, வீட்டின் முன் சிறிது நேரம் நின்றது.
பின்னர் வீடியோ எடுத்த நபர் கரடி, கரடி என்று சத்தம் போடவே அங்கிருந்து அந்த கரடி பக்கத்து ஓட்டு வீட்டின் மீது தாவி குதித்து ஓடியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வீட்டின் மொட்டை மாடியில் கரடி உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.