

சென்னை,
சென்னை மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் அ. யாஸ்மின்பேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்து நடப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொழிலாளர்களுக்கு மேலும் ரூ.1,000 நிதி வழங்கிடவும் அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களில் முதல் தவணையாக ரூ.1,000 நிவாரண நிதி பெற்றவர்களுக்கு, 2-வது தவணையாக நிவாரணநிதி வழங்கிடவும், நிவாரண நிதி பெறாத தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கு மூலமாக வழங்கிடவும் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிவாரண நிதிக்காக வங்கி கணக்கு எண் வழங்காத தொழிலாளர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி விடவேண்டும். வங்கி கணக்கு எண் இல்லையென்றால், புதிதாக வங்கி கணக்கை தொடங்கி அந்த விவரத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.