சிறுபான்மை மக்கள் எங்களிடம் பேசுவதால் தி.மு.க. பயப்படுகிறது

சிறுபான்மை மக்கள் எங்களிடம் பேசுவதால் தி.மு.க. பயப்படுகிறது
Published on

'மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை கூறுகிறார். சிறுபான்மை மக்கள் எங்களிடம் பேசுவதால் தி.மு.க. பயப்படுகிறது' என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் என கூறிக்கொண்டு 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இதனால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். இதனை திசை திருப்பவே அவர்களது கட்சி கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி விமர்சனம் செய்துள்ளார். என்னை பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும் பொய்யான தகவல்களை பரப்புகிறார். இது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய பிறகு தி.மு.க.வினருக்கு பயம் வந்துவிட்டது. இதுநாள் வரை தாங்கள் தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு என்று கூறி வந்தனர். நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சிறுபான்மை மக்கள் எங்களையும், எங்கள் கட்சி நிர்வாகிகளையும் சந்திப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் இன்று தி.மு.க. அரசு திறந்து வைக்கிறது. மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டுகிறார். அத்திக்கடவு- அவினாசி திட்டம் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இது முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதேபோல் மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தையும் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. இந்த திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் கிடப்பில் கிடக்கிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சை பொய்யை கூறுகிறார். முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டதா? இளைஞர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்பட்டதா? மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டதா? `நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டதா? இப்படி எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு

டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஆனால் கர்நாடகத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டு லாரிகளுக்கு கர்நாடகாவில் டீசல் நிரப்பி விடுகிறார்கள். எனவே நமக்கு வர வேண்டிய வரி கர்நாடகத்துக்கு சென்று விடுகிறது. மின்கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியது தான் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனை. இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். புதிய திட்டங்கள் என்று எதுவும் இருக்கிறதா? என்றால் ஒன்றை கூட சொல்ல முடியாது.

`நீட்' தேர்வு என்பது தேசிய பிரச்சினை. ஜல்லிக்கட்டு என்பது மாநில பிரச்சினை. எனவே `நீட்' தேர்வை ரத்து செய்யாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று நடைபெறும் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். யாரிடம் கொடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. மக்களை திசை திருப்புவதற்காக முட்டை நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்து இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு முட்டையை தான் வழங்குவார்கள்.

பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது

வருகிற நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல அதற்கு அடுத்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன். பா.ஜனதாவின் `பீ டீம்' அ.தி.மு.க. என்று கூறுவது உண்மை அல்ல. பதவிக்கு வர வேண்டும் என்றால் தி.மு.க. எதையும் செய்யும். இந்தியா கூட்டணி நிலைக்குமா என்பது எதிர்காலத்தில் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை

முன்னதாக நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் செம்மலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதில் சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, சுந்தரராஜன், நல்லத்தம்பி, ஜெயசங்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com