தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், மினி லோடு வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், மினி லோடு வாகனம் பறிமுதல்
Published on

தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்புசப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இன்று அதிகாலையில் தெர்மல்நகர் கடற்கரைக்கு செல்லும் வழியில் தெர்மல்நகர் காவல் நிலையத்திற்கு 200 மீட்டர் தொலைவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த மினி லோடு வாகனம் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அப்போது போலீசாரைக் கண்டதும் வாகனத்தில் இருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனயைடுத்து அந்த மினி லோடு வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது அதில் தலா 30 கிலோ எடை கொண்ட 44 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 40 லட்சம் ஆகும்.

கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி லோடு வாகனம் ஆகியவற்றை உரிய விசாரணைக்குப் பிறகு சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com