

தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள முதலூர் வீட்ஸ் நிறுவனம், மதுரை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இணைந்து தேனீ வளர்ப்போர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தேன் உற்பத்தி, தொழில் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மதுரை மண்டல கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய இயக்குனர் அசோகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், "4 ஆண்டுகளாக இப்பகுதியில் தேனீ வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகளிர் கூட்டமைப்புக்கு இதுவரை 750-க்கும் மேற்பட்ட தேனீ பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி வரை மானிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தேனீ வளர்ப்பில் முழுவீச்சில் ஈடுபட்டால் அதிக தேன் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அதிக பலன் அடையலாம் என்றார்.
வீட்ஸ் இயக்குனர் சார்லஸ் வரவேற்றார். தேனீ வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மகளிர் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். அவர்களுக்கு தேன் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து, பயிற்சியாளர் லாசர், மார்த்தாண்டம் தேன் வளர்ப்போர் ஒருங்கிணைப்பாளர் தாஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி கூடுதல் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் துரைராஜ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சக உதவி இயக்குநர் ஜெரினா பாப்பி, முன்னணி தேன் சேகரிப்பாளர் அய்யப்பன் ஆகியோர் விளக்கினர். மகளிர் கூட்டமைப்பு செயலர் வேதா உள்ளிட்ட மகளிர் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய துறை அலுவலர் கலிபூர்ரகுமான் நன்றி கூறினார்.