

சென்னை,
தமிழகத்தில் 5 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. பண்டிகை நாட்களில் ரூ.150 முதல் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்கிறது.
தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக மதுபான வகைகளை விட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 5 எலைட் கடைகள் உள்பட 160 டாஸ்மாக் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு ரூ.4½ கோடி முதல் ரூ.5½ கோடி வரை மதுவிற்பனை நடைபெறும். அதுவும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரூ.7 கோடி வரை மதுவிற்பனை நடைபெறும்.
வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளைவிட, பிராந்தி வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பிராந்தி வகைகளைவிட பீர்வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.
நடப்பாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதனால் கடந்த சில நாட்களாக விஸ்கி, பிராந்தி வகைகளை மதுப்பிரியர்கள் தவிர்க்க தொடங்கி உள்ளனர். அதற்கு பதிலாக பீர் போன்ற மதுவகைகளை நாடத்தொடங்கியுள்ளனர்.
இதனால் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் பிராந்தி வகைகளின் விற்பனை ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் ஒரே மாதிரியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.