பட்டினி சாவு ஏற்படுவதற்கு முன்பு சலூன் கடைகளை திறக்க கோரி வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்

பட்டினி சாவு ஏற்படுவதற்கு முன்பு சலூன் கடைகளை திறக்க கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பட்டினி சாவு ஏற்படுவதற்கு முன்பு சலூன் கடைகளை திறக்க கோரி வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்
Published on

சென்னை,

தமிழ்நாடு முடி திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் முடி திருத்தும் கடைகள்(சலூன்கள்) மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பல்வேறு தொழில்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஊரடங்கிற்கு முன்னதாக மாதம் குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடி திருத்தும் தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த ஒரு வருமானமும் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் இந்த வறுமையினால் தற்கொலையும் செய்துள்ளனர்.

எனவே, வருமானம் இல்லாமல், இந்த தொழிலாளர்கள் பட்டினி சாவினால் உயிரை விடுவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. சலூன் கடைகள் திறக்க அரசு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க தயாராக உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு உரிய விளக்கத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com