

கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
முன்பு திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக, திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்பப்பட்டது. அதேபோன்று தற்போதும் திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்பு செய்வதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடங்களை அவர்களால்தான் நிறைவு செய்ய முடியும். அவர்களுக்கு பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால்தான், ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்பி விட்டனர்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
முன்னதாக அவர் ஸ்ரீவைகுண்டத்தில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடாது. இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. கோவில்களில் கலைநயத்துடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கொச்சைப்படுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார். அவர் சிற்பங்களை பார்க்கும் பார்வையில்தான் குறைபாடு உள்ளது என்றார்.