பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்

பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிக்க போலீசாரும், சமூக நலத்துறையினரும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள்.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
Published on

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.

ஓடி ஒளிந்தார்கள்

* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள்.

அரசு வாகனங்கள் வருவதைக் கண்டாலே போதும் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

* அவ்வாறு பிடித்துப் போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.

* மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப் படுவார்கள்.

* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன.

இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தி இருந்தால் பிச்சைக் காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

காசு பார்க்கும் கயவர்கள்

'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது.

நாளடைவில் அது முடங்கிப் போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிப்பாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.

குழந்தைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர்.

அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திரப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப் படுகிறது.

போலீஸ் நடவடிக்கை

தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களைக் குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.

இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கடந்த வாரத்தில் ஆதரவற்ற நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் சுற்றித்திரிந்தவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 65 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதரிக்க யாரும் இல்லாததால் திண்டுக்கல் நகர் பகுதியில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்த முதியவர்கள் ஆவார்கள். இதில் திண்டுக்கல்லில் மட்டும் 24 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் மாவட்ட பகுதியில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர். பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிக்க போலீசாரும், சமூக நலத்துறையினரும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பாராட்டுக்குரியது

திண்டுக்கல்லை சேர்ந்த குடும்ப தலைவி உமா:- மனக்குறையை இறைவனிடம் தெரிவித்து வழிபடவே கோவிலுக்கு செல்கிறோம். ஆனால் கோவிலுக்குள் நுழையும் முன்பே யாசகம் கேட்டு நச்சரிக்கின்றனர். அதிலும் குறைந்தபட்சம் ரூ.5 ஆவது கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ரூ.1, ரூ.2 கொடுத்தால் ஒரு சிலர் வாங்க மறுக்கின்றனர். நிம்மதியை தேடி கோவிலுக்கு சென்றால் அங்கும் நிம்மதியில்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது இதற்கு முடிவே இல்லையா? என எத்தனையோ நாட்கள் எண்ணி புலம்பி தவித்திருக்கிறேன். தற்போது போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் ஆதரவற்றவர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

பழனியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட ஆறுமுகம்:- எனது சொந்த ஊர் கோவை செல்வபுரம். அங்கு தங்கநகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன். குடும்ப பிரச்சினையால் 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு புறப்பட்டு வந்தேன். பின்னர் முக்கிய ஆன்மிக தலங்களுக்கு சென்று வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிக்கு வந்து அடிவாரம், பஸ்நிலையம் ஆகிய பகுதியில் தங்கியிருந்தேன். இந்நிலையில் போலீசார் என்னை மீட்டு தற்போது விடுதியில் சேர்த்தனர். இங்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருகின்றனர். எனினும் நான் திருவண்ணாமலை, திருத்தணி போன்ற ஆன்மிக தலங்களுக்கு செல்ல உள்ளேன் என்றார்.

சிரமப்பட்டேன்

ராதாகிருஷ்ணன்:- எனக்கு சொந்த ஊர் வத்தலக்குண்டு. குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பழனி வந்தேன். பழனி பஸ்நிலையம், ரெயில்நிலையம், அடிவாரம் ஆகிய பகுதியில் தங்கி வந்தேன். அங்கு கிடைக்கும் அன்னதானம் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு வந்தேன். திறந்தவெளியில் தங்குவதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினேன். இந்நிலையில் போலீசார் என்னை மீட்டு வீடற்றோர் தங்கும் விடுதியில் சேர்த்தனர். இங்கு போதிய வசதிகள் செய்து தருகின்றனர் என்றார்.

போலீசாருடன் இணைந்து...

ரவிச்சந்திரன் (அறக்கட்டளை நிர்வாகி):- பழனியில், அன்னை அறக்கட்டளை என்ற பெயரில் 22 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். தற்போது நகராட்சியுடன் இணைந்து வீடற்றோர் தங்கும் விடுதியில் ஆதரவற்றோர்களை பராமரித்து வருகிறோம். இங்கு 68 பேர் தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலும் முதியோர்கள்தான். குறிப்பாக குடும்பத்தினர் சரியாக கவனிக்காமல் விடுவது, குடும்ப பிரச்சினை போன்றவற்றால் வீட்டை விட்டு வந்தவர்கள் தான் அடிவாரத்தில் தங்கி உள்ளனர்.

இவர்கள் வெயில், மழையாலும், சரியான மருத்துவ வசதி கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது நகராட்சி, போலீசாருடன் இணைந்து அவர்களை மீட்டு இங்கு பராமரித்து வருகிறோம். இவர்களுக்கு தேவையான உணவு, நகராட்சி, பழனி முருகன் கோவில் மற்றும் அறக்கட்டளை மூலம் அளித்து வருகிறோம். வரும் நாட்களிலும் போலீசாருடன் இணைந்து பழனியில் ஆதரவற்றவர்களை பராமரிக்க உள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com