நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது: எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

அரிவாளால் வெட்டிய கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டி அடித்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, சென்னையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது: எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
Published on

சென்னை,

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவரது மனைவி செந்தாமரை.

இவர்களுடைய இரு மகன்கள் மற்றும் மகள் வெளியூர்களில் வசிக்கின்றனர். சண்முகவேலும் செந்தாமரையும் கல்யாணிபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த 11-ந் தேதி அன்று இரவு 9.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சண்முகவேல் வீட்டுக்கு வந்தனர். அவர்களில் ஒருவன் சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயன்றான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து செந்தாமரை வெளியே ஓடி வந்தார். உடனே கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

ஆனால் அதைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அந்த வயதான தம்பதியர் நாற்காலிகள், ஸ்டூல், கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி தாக்கினார்கள். அவர்களுடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல், கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். போகும் போது கொள்ளையர்கள் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் சண்முகவேல் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதைப் பார்த்த பலரும், கொள்ளையர்களுடன் போராடி துணிச்சலுடன் விரட்டி அடித்த வயதான வீரத்தம்பதியை வியந்து பாராட்டினார்கள்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று முன்தினம் சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் வீட்டுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து கொள்ளை சம்பவம் குறித்து கேட்டு அறிந்ததோடு, அவர்களுடைய துணிச்சலை பாராட்டினார்.

அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கையில் கிடைப்பதை வைத்து துணிச்சலுடன் செயல்பட மற்றவர்களுக்கு இந்த தம்பதி தூண்டுதலாக இருந்ததால், அவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. எனவே அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிந்துரை கடிதம் எழுதினார்.

இதைத்தொடர்ந்து, சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலை பாராட்டி அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வருமாறு சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு அரசு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். இதைத்தொடர்ந்து அம்பாசமுத்திரம் தாசில்தார் வெங்கடேசன், அவர்களை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தார். சண்முகவேல்-செந்தாமரை தம்பதியுடன் அவர்களுடைய மகன் அசோக்கும் வந்தார்.

சென்னை வந்த அவர்கள், விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அங்கு பொதுத்துறை உயர் அதிகாரியை அவர்கள் சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் விருதுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அளித்தனர்.

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 9 மணி அளவில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிச்சலுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவிக்கிறார்.

முன்னதாக நேற்று சென்னை வந்ததும் விமான நிலையத்தில் சண்முகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 5 நிமிடத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். அடுத்த 20 நிமிடத்திற்குள் போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டனர். என் மனைவியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிட்டனர். சுதந்திர தின விழாவில் எங்களை கவுரவிப்பதற்காக முதல்- அமைச்சர் அழைத்து உள்ளார். அதற்காகத்தான் நாங்கள் சென்னை வந்து இருக்கிறோம். மக்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் மனம் தளரக்கூடாது. இதுதான் நான் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சண்முகவேலின் மனைவி செந்தாமரை கூறும்போது, அந்த நேரத்தில் எனது மனநிலை வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. என் கணவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் இருந்தது. அதனால்தான் நான் அந்த கொள்ளையர்களை தாக்கினேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com