இலவச சிலிண்டர் திட்டத்துக்கு விரைவில் பயனாளிகள் தேர்வு: 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெற வாய்ப்பு

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 42 லட்சம் இணைப்புகள் உள்ளன.
இலவச சிலிண்டர் திட்டத்துக்கு விரைவில் பயனாளிகள் தேர்வு: 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெற வாய்ப்பு
Published on: 

சென்னை,

த.வெ.க. அரசின் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு பணி விரைவில் தொடங்கப்படுவதாகவும், 1.30 கோடி குடும்பங்கள் வரை பயன்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலவச கியாஸ் சிலிண்டர்

த.வெ.க. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 6 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் 'அன்னபூரணி சூப்பர் 6' எனும் திட்டத்தை அறிவித்தது. இதனை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும், வருகிற பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். மேலும் சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும், 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பயனாளிகள் பட்டியல்

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இணைப்புகள் மொத்தம் 2 கோடியே 40 லட்சம் எண்ணிக்கையில் உள்ளது. இதில் ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சம் ஆகும். இதில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் சிலிண்டர் இணைப்புகளை வழங்கும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 42 லட்சம் இணைப்புகள் உள்ளன.

இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை தொடங்குவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்பு பெற்றோர், மகளிர் உதவித்தொகை ரூ.1,000 பெறுவோர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ள குடும்பத்தினர் விவரங்களை கொண்டு அரசு பயனாளிகளின் பட்டியலை கணக்கிடுகிறது.

1.30 கோடி குடும்பங்கள்

இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்த இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைய உள்ளதாக கூறப்படுகிறது. த.வெ.க. அரசு அறிவித்துள்ள இலவச கியாஸ் சிலிண்டர் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்ய, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

X