

கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. அதில், சுவேந்து அதிகாரி, முதல்-மந்திரி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார்.
மேற்கு வங்காள கவர்னர் ஆர்.என்.ரவியை சுவேந்து அதிகாரி சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் புதிய அரசின் பதவியேற்பு விழா கடந்த 9-ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி கள், பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேற்கு வங்காளத்தின் முதலாவது பா.ஜனதா முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
அடுத்தபடியாக, பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் திலீப் கோஷ் கேபினட் மந்திரியாக பதவியேற்றார். பா.ஜனதாவைச் சேர்ந்த அக்னிமித்ரா பால், அசோக் கீர்தானியா, சுதிராம் துடு. நிசித் பிராமணிக் ஆகியோரும் புதிய மந்திரிகளாக பொறுப்பேற்றனர்.
இந்தநிலையில், மேற்கு வங்க பள்ளிகளில் நாள்தோறும் காலையில் வந்தே மாதரம் பாடப்படுவதைக் கட்டாயமாக்க பள்ளிகளுக்கு அம்மாநிலத்தில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி நிறுவனத் தலைவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி, வரும் திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடல் கடவுள் வாழ்த்தாக அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.