பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பங்கேற்பு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துகொண்டார்.
பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பங்கேற்பு
Published on

உலக பெருங்கடல்கள் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கடற்கரைகளை தூய்மைப்படுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும். இந்தியா 7,500 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரையை கொண்டுள்ளது. நாம் பெருங்கடல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுடன் நேரடி மற்றும் தீவிர தொடர்பை கொண்டுள்ளோம்.

மேலும், சென்னை அழகிய கடற்கரையை கொண்டுள்ளது. நாம் கடற்கரையை பேணி காக்கவும் கடல்வாழ் உயிரினங்களின் நீடித்த வாழ்விற்கும் மிக முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மேலும், இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா கடற்கரை பாதுகாப்பில் உலக அளவில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவை போன்றே நார்வே, ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதியில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

பெருங்கடல்கள் பாதுகாப்பில் இந்தியாவும், நார்வேயும் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன். கடற்கரைகளை சுத்தப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதை காண முடிகிறது. கடற்கரையோரம் வாழும் மீனவர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நீடித்த வாழ்விற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். கடற்கரை பாதுகாப்பு குறித்து சென்னை மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து கடற்கரை நகரங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன், தேசிய பெருங்கடலியல் நிறுவன இயக்குநர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com