பெசன்ட் நகர் மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும்: உதயநிதி ஸ்டாலின்

பெசன்ட் நகர் மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பெசன்ட் நகர் மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும்: உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (27.10.2024) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். மாற்றுத்திறனாளின் நலனுக்காக அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்க வேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை திறக்கப்பட்து. 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 225 மீட்டர் தூரத்திற்கு அந்த பாதையில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தினமும் மெரினாவை ரசித்து வருகிறார்கள்.

மெரினாவில் கிடைத்து வரும் இந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை அமைக்க மாற்றுத்திறனாளிகள் பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அதன்படி பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்க முதல்-அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டினார்.

அதன்படி 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை 189 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. கிட்டத்தட்ட 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பணியை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பல கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் முன்வைத்துள்ளார்கள். அதன்படி பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இதேபோன்ற சிறப்பு பாதையை கழக அரசு விரைவில் அமைக்க உள்ளது. சென்னை மட்டுமின்றி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்பட உள்ளது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு மாதத்தில் அந்த பணி ஆரம்பிக்கப்பட்டு நான்கைந்து மாதங்களில் நிறைவேற்றப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com