சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை

சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் கடந்த 1993-ம் ஆண்டு விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சென்னை-சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. போதிய அளவில் வருமானம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக இருந்ததாலும் இந்த விமான சேவை 2010-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் சேலம் விமான நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 7 ஆண்டுகளுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனம் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு சேலத்துக்கு வந்தார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன் மற்றும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இல.கணேசன் எம்.பி., தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் வந்தனர்.

விமான சேவையை தொடங்கி வைத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது கூறியதாவது:-

ஏழை, எளிய-மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சிறு நகரங்களை பெருநகரங்களுடன் இணைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு 21.10.2016-ல் மண்டலங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்து திட்டமான உதான் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டிலுள்ள சிறு நகரங்களில் விமான சேவை தொடங்குவதற்காக 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டிலுள்ள சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களை தேர்வு செய்து, விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி சேலத்தில் முதன் முதலாக இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை இயக்குவதற்காக 20 சதவீதம் கடன் ஈட்டு தொகையையும் தமிழக அரசு வழங்க உள்ளது. சேலத்தில் விமான சேவை தொடங்கியதன் மூலம் ஈரோடு, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழில் வளம் பெருகுவதோடு வணிகர்கள் பயன் பெறுவார்கள். இதன்மூலம் இளைஞர்களுக்கும் அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இன்றைக்கு மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மாநில அரசுக்கு தேவையான திட்டங்கள், நன்மைகள் கிடைக்கும்.

சேலத்தில் இருந்து சென்னை வரை 6 வழி பசுமை சாலைகள் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சென்னைக்கு பயண நேரம் 6 மணியில் இருந்து 3 மணி நேரமாக குறையும்.

ஓசூர், கோவை, சேலம் போன்ற பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தொழிற்சாலை வந்தால் படித்த, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டதை பாராட்டி பேசினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆதரவற்ற குழந்தைகள் 2 பேருக்கு விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட்டை வழங்கினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, சேலம் விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பிற நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து சேலம் வரவும் பெரிய ரக விமானங்களை இயக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அது முடிந்தவுடன் சேலத்தில் இருந்து பெரிய ரக விமானங்களும் இயக்கப்படும் என்றார்.

72 இருக்கைகள் கொண்ட சென்னை-சேலம் விமானத்தில் கட்டண சலுகையாக ஒருவழி பயணத்திற்கு ரூ.1,499 வசூலிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட இருக்கைகளுக்கு இந்த சலுகை என்றும் நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளுக்கு பின்னர் ரூ.2,499 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com