தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல் இயக்கம்:மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராமச்சந்திரன் பேட்டி

தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல் இயக்கம்:மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராமச்சந்திரன் பேட்டி
Published on

தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ரூ.50 ஆயிரம் பரிசு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த லோகோவுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ராஜேந்திரன் ஆர்.ரஞ்சனி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. வ.உ.சி துறைமுகம் உலகின் முக்கியமான துறைமுகமாக திகழ்வதற்கு இது ஒரு முக்கியமான பணியாக இருக்கும்.

அகில இந்திய அளவில் சாகர்மாலா திட்டத்தின் மூலம் சுமார் ரூ.5 லட்சம் கோடி பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மட்டும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தின் 9-வது கப்பல் தளம் சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ரூ.7 ஆயிரம் கோடி செலவில் வெளித்துறைமுகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

காற்றாலைகள்

தூத்துக்குடி துறைமுகத்தை பொறுத்தவரை திரவ ஹைட்ரஜன் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, குஜராத் துறைமுக பகுதிகளில் கடலில் காற்றாலைகள் அமைப்பதற்கான வாய்ப்புள்ள இடமாக இருக்கிறது. ஆகையால் அங்கு காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. தூத்துக்குடியில் முதல்கட்டமாக 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.

சுற்றுலா முனையங்கள்

கொச்சி, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் சுற்றுலா முனையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த துறைமுகங்களில் இருந்து சுற்றுலா கப்பல்கள் வந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரை, சர்வதேச கடல் பகுதி மற்றும் ஆறு ஆகிய நீர் வழித்தடங்களை இணைக்கும் வகையில் நீர்வழி போக்குவரத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி-கொழும்பு

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக 2 கப்பல் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன. இதனை ஆய்வு செய்து, கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி அளித்து கடிதம் வழங்கி உள்ளோம். இது இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து என்பதால் இரு நாடுகளிடமும் அனுமதி பெற வேண்டும். இதனால் அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 300 பயணிகளை ஏற்றி செல்லும் வகையிலான கப்பலை இயக்க உள்ளனர். இலங்கையில் இருந்து அனுமதி கிடைத்த உடன் விரைவில் கொழும்புக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com