விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 'பாரத் பந்த்': தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 'பாரத் பந்த்': தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு!
Published on

சென்னை,

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த பாரத் பந்த் எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, மதுராந்தகம், கும்பகோணம், சீர்காழி, புதுக்கோட்டையில் கடைகள் மூடப்பட்டுள்ளது.

கோவை, மன்னார்குடி, மதுரை, கோபிச்செட்டிபாளையம், மரக்காணம், காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பந்துக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆர்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com