

சென்னை,
இந்து ஆன்மிக சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 9-வது இந்து ஆன்மிக கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் விமரிசையாக நடைபெற உள்ளது.
கண்காட்சிக்கு ஏராளமானவர்களை வரவழைக்கும் நோக்கில் முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பரத முனி நாட்டியத்தான் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலாஷேத்ரா நாட்டிய பள்ளியின் முன்னாள் இயக்குனர் பிரியதர்ஷினி கோவிந்த், இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், 75 ஆண்டுகள் பழமையான நிருத்யோதயா நடனப்பள்ளியில் பயில்பவர்கள் மற்றும் நடன ஆசிரியைகள் உள்பட 3 ஆயிரம் பெண்கள் ஒரே நேரத்தில் நடனம் ஆடி அசத்தினர்.
தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 14 பாடல்களுக்கு ராம்ஜியின் இசையில் நடனங்கள் அரங்கேறின.
இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் வரவேற்புக்குழு தலைவரும், பரத நாட்டிய கலைஞருமான பத்மஸ்ரீ பத்மா சுப்பிரமணியம் நாட்டியம் ஆடிய பெண்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தார்.
பரத நாட்டியக்கலையை தோற்றுவித்த பரத முனிவரை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு பரத முனி நாட்டியத்தான் என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்து ஆன்மிக கண்காட்சியை நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.