

பவானி,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மரவபாளையம் காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். அவருடைய மகன் தமிழரசன் (வயது 20). இவர் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து நண்பர் சஞ்சயுடன் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் சஞ்சயும், தமிழரசனும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழரசன் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது திடீரென அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் சுழல் அதிகம் இருந்ததால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் தமிழரசனை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தமிழரசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.