நீலகிரி மலைப்பகுதியில் மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி மலைப்பகுதியில் மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பவானிசாகர்

நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

நீர்வரத்து ஆதாரங்கள்

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக உள்ளன. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும் பவானிசாகர் அணையில் கலக்கிறது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

பொதுப்பணித்துறை விதி

பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையில் வகுக்கப்பட்ட விதியின் படி அக்டோபர் மாதம் இறுதிவரை 102 அடிவரையிலும் நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடிவரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 800 கன அடியாக இருந்தது.

நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரத்து 450 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,750 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 5-ம் தேதி காலை 9 மணியிலிருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com