

சென்னை,
சென்னையில் ராயப்பேட்டை - திருவல்லிக்கேணி மற்றும் அடையாறு-பெசன்ட்நகர் திருவான்மியூர் ஆகிய வழித்தடங்களில் நடைபாதைகள் மற்றும் சைக்கிள் தடங்கள் அமைக்க மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
முதல்-அமைச்சர் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த மோட்டார் வாகனமற்ற போக்குவரத்துப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி ரூ.31.21 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சாலைகளை மறுவடிவமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை-ராயபுரம்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்திற்கும், தென் சென்னையில் மற்றொரு வழித்தடத்திற்குமான திட்ட முன்மொழிவுகள் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. அவற்றிற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஒரு மாதத்திற்குள் கோரப்படும்.
இத்திட்டத்தின்கீழ் ராயப் பேட்டை - திருவல்லிக்கேணி வழித்தடம் ரூ.11.88 கோடி மதிப்பீட்டில் 6.49 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு எதிரே உள்ள வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு (அண்ணா சாலை) ஆகியவற்றை இது இணைக்கிறது.
வாலாஜாசாலை, டாக்டர் நடேசன் சாலை, காயிதே மில்லத் சாலை, விக்டோரியா விடுதி சாலை, சேப்பாக்கம் ரெயில் நிலைய சாலை மற்றும் பாரதி சாலை (பைகி ராப்ட்ஸ் சாலை) ஆகிய முக்கிய சாலைகளில் இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில் 5.12 கிலோமீட்டர் தூரத்திற்குச் சீரான அகலம், தொட்டுணரும் தரைத்தளம், அனைவரும் பயன்படுத்தக் கூடிய சாய்வுதளங்கள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபாதைகள் மேம்படுத்தப்படும். எஞ்சிய 1.37 கிலோமீட்டர் தூரம் மேம்படுத்தப்பட்ட தெருவிளக்குகள், பாதசாரிகளுக்கு உகந்த இடங்கள், நில அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய 'ஸ்மார்ட்' சாலைகளாக உருவாக்கப்படும்.
மற்றொரு வழித்தடமான அடையாறு-பெசன்ட்நகர்-திருவான்மியூர் பகுதி ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் 9.77 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்படுத்தப்படுகிறது. சர்தார் படேல் சாலை மற்றும் எல்.பி. சாலை வழியாகப் பழைய மகாபலிபுரம் சாலை அருகே வரை இந்த வழித்தடம் நீள்கிறது.
சர்தார் படேல் சாலை, டாக்டர் முத்துலட்சுமி சாலை, இந்திரா நகர், பெசன்ட் நகர், கஸ்தூரிபாய் நகர், காந்தி நகர், ராமச்சந்திர ஆதித்தனார் தெரு, கோட்டூர் கார்டன்ஸ் இணைப்புச் சாலை, எல்.டி.ஜி. சாலை மற்றும் ஸ்ரீநகர் காலனி ஆகிய முக்கிய சாலைகள் இதில் அடங்கும்.
இதில் 6.56 கிலோமீட்டர் தூரத்திற்குக் குறைந்தபட்சம் 1.8 மீட்டர் தெளிவான அகலத்துடன் கூடிய நடைபாதைகள், தொட்டுணரும் தரைத்தளம், சாய்வுதளங்கள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புத் தூண்கள் அமைக்கப்படும்.
அடையாறு மண்டலத்தில் உள்ள காந்தி நகர் இரண்டு மற்றும் மூன்றாவது குறுக்குத் தெருக்கள் மற்றும் ராமச்சந்திர ஆதித்தனார் தெரு ஆகியவற்றின் 1.71 கிலோமீட்டர் தூரத்திற்கு, அப்பகுதியில் உள்ள 42 பள்ளிகளுக்குப் பாதுகாப்பாகச் சென்று வர ஏதுவாக வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பாதுகாப்பான பாதசாரி கடவுகள் மற்றும் மாணவர்களை ஏற்றி இறக்கும் பிரத்யேக இடங்கள் அமைக்கப்படும்.
இதுதவிர 1.5 கிலோமீட்டர் தூரம் பாதசாரிகள் வளாகம், தெருவிளக்குகள், நில அழகுபடுத்துதல், இருக்கை வசதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய 'ஸ்மார்ட்' சாலைகளாக மேம்படுத்தப்படுவதுடன், போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்ய 11 சாலை சந்திப்புகளும் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளன.