

சென்னை
நாட்டில், பயங்கரவாத சதி திட்டத்துடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்த, பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டிய, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு மற்றும் வங்காளதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அந்த 8 பேரும் சமூக வலைதளம் வழியே ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். சாட்டிங்குகளை பகிர்ந்து வந்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களில் 2 பேர் ஊத்துக்குளி பகுதியிலும், 3 பேர் பல்லடம் பகுதியிலும், ஒருவர் திருமுருகன்பூண்டி பகுதியிலும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி, தங்களை அடையாளம் தெரியாத வகையில் மறைத்து ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 மொபைல் போன்கள், 16 சிம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மிஜானூர் ரஹ்மான், முகமது ஷாபத், உமர், முகமது லிடன், முகமது ஷாகித், முகமது உஜ்ஜல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவர்கள் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.
பயங்கரவாதிகள் பலருக்கும் நிதியுதவி செய்திருப்பர் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவர்கள் போலீசாரால், டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதுதவிர மேற்கு வங்காளத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 8 பேரில் 4 பேர் சமீபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின்போது, ஒன்றாக டெல்லிக்கு வந்து, சுதந்திர காஷ்மீர் என்ற வாசகம் மற்றும் சர்ச்சைக்குரிய பிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒட்டியுள்ளனர்.
இதன்பின்னர் தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு பிரிந்து சென்று விட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னரே வங்காளதேசம் மற்றும் ஐ.எஸ்.ஐ.யுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றிய விரிவான விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் (கோவில்கள்), வரலாற்று பிரசித்தி பெற்ற செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது என உளவு துறை நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த பகுதிகள், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து உள்ளன. இதன்படி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. கோவிலும் கடுமையாக தாக்குதலுக்கு ஆளாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மசூதி ஒன்றில் கடந்த 6-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிக்கு பழியாக இந்த தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என உளவு துறை தெரிவித்துள்ளது. ஆபரேசன் சிந்தூருக்கு பதிலடியாகவும் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 10-ந்தேதி டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 12 பேர் பலியானார்கள். அருகே நிறுத்தி இருந்த பல்வேறு வாகனங்களும் தீயில் எரிந்து விட்டன. இந்த சூழலில், தமிழகத்தில் நடத்த இருந்த மிக பெரிய பயங்கரவாத சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.