பாலத்தின் மீது பைக் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு

கோவில்பட்டியில் வாலிபர் ஒருவர், விலைக்கு வாங்குவதற்காக பைக்கை ஓட்டிப் பார்த்தபோது பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பைக்கை விலைக்கு வாங்குவதற்காக ஓட்டிப் பார்த்த போது, எதிர்பாராத விதமாக சாலையோர பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

பைக் ஓட்டிப் பார்த்த வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணவரன் (வயது 19). இவர் இலுப்பையூரணியைச் சேர்ந்த ஒருவரது பைக்கை விலைக்கு வாங்குவதற்காக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த நபரிடம் பைக்கை ஓட்டிப் பார்ப்பதற்காக கொண்டு வரும்படி அவர் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் தோட்டில்லோவன்பட்டி விலக்கு பகுதிக்கு பைக்கைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

பாலத்தின் மீது பைக் மோதி விபத்து

நேற்று மாலை 3 மணியளவில் சரவணவரன் அந்த பைக்கை மதுரை - நெல்லை நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலையில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம் அருகே ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பலமாக மோதியது.

வாலிபர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

இந்த விபத்தில் சரவணவரன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கை ஓட்டிப் பார்த்தபோது, பாலத்தில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com