திருமண வரவேற்பில் இருதரப்பினர் மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருமண வரவேற்பு விழாவில் இருதரப்பினர் இடையே குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமண வரவேற்பில் இருதரப்பினர் மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

திருமண வரவேற்பில் மோதல்

சென்னை கொடுங்கையூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் ஒரு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற இருதரப்பினர் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியதுடன், அரிவாள், அரிவாள்மனை ஆகியவற்றாலும் வெட்டிக்கொண்டனர். இந்த மோதல் காரணமாக திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற உறவினர்கள் அதிர்ச்சியில் அலறி அடித்து ஓடினர். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2 பேருக்கு வெட்டு

இதில் கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் 3-வது தெருவைச்சேர்ந்த விஜய் (வயது 20) என்பவருக்கு தலை மற்றும் முழங்கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து (20) என்பவருக்கும் வலது கை விரலில் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

பின்னர் மோதலில் ஈடுபட்டதாக மாதவரம் அடுத்த மூலச்சத்திரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (20), தமிழ் அன்சாரி (20), இம்ரான் (22) மற்றும் சேலைவாயிலை சேர்ந்த சுந்தர் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com