பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா: கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா: கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் மாநில கவர்னரே, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்து வந்தார்.

மசோதா நிறைவேற்றம்

குஜராத் மற்றும் தெலுங்கானாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக சட்டங்களை திருத்தம் செய்வதற்கான இந்த மசோதாவை சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதையடுத்து, தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதா சட்டசபை செயலகத்தில் இருந்து, சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கவர்னர் அலுவலகத்துக்கு...

சட்டத்துறையில் இருந்து இந்த மசோதா முதல்-அமைச்சரின் அலுவலகம் மற்றும் தலைமைச்செயலாளரின் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முதல்-அமைச்சரின் அலுவலகம், தலைமைச்செயலாளரின் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் இந்த மசோதா கவர்னரின் அலுவலகத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி அனுமதி பெற்ற பின்னரே தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்ட மசோதா இறுதி வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை நிறைவுசெய்துவிட்டு ஊட்டியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com