இன்னும் ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக் பதிவு’ முறை அமல் - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் பயோ மெட்ரிக் பதிவு முறை அமலுக்கு வரும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
இன்னும் ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக் பதிவு’ முறை அமல் - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் இன்னும் ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் பயோ மெட்ரிக் பதிவு முறை அமலுக்கு வரும். அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி 10-வது மண்டலத்தில் உள்ள பாண்டிபஜார், தியாகராய சாலை மற்றும் 8-வது மண்டலத்தில் உள்ள மேத்தா நகர், ஹரிங்டன் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர், விழிப்புணர்வு கையேடு ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. சென்னையில் விரைவில் கொரோனா தொற்று இன்னும் வெகுவாக குறைக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட 81 நாட்களில் சுமார் 24 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் சுமார் 14 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

அதிக கூட்டம் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 71 ஆயிரம் பேர் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயோ மெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பயோ மெட்ரிக் பதிவு திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்திற்கு உள்ளாக பயோ மெட்ரிக் பதிவுகள் செய்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com