

சென்னை
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழந்த நிலையில், அதனை 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் வண்ண நாரைகள் உள்ளிட்ட 14 நீர்வாழ் பறவைகள் திடீரென உயிரிழந்தன. இதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இந்த நிலையில், பறவைகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கண்டறிய பரிசோதனை மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்பின்னரே, பறவைகள் உயிரிழப்புக்கான காரணம் பற்றி தெரிய வரும். இதனை தொடர்ந்து, நோய் தொற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்டவற்றை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையொட்டி, சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது. பறவைக்காய்ச்சல் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில். கடந்த மார்ச் மாதத்தில், பறவைகள் திடீரென உயிரிழந்தன. மேலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்தன. ஏறக்குறைய 40 பறவைகள் உயிரிழந்த நிலையில், அவற்றை பரிசோதித்ததில், பறவை காய்ச்சல் காரணமாக அவை உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து, கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, 2-வது முறையாக பூங்கா மூடப்படுகிறது.