

கடலூர்,
பறவை காய்ச்சல், கார்த்திகை மாதம் பிறப்பு ஆகிய காரணங்களால் கடலூர் மாவட்டத்தில் கோழி இறைச்சி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை விலையும் குறைந்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்வதற்காக கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு, தம்மனாம்பேட்டை, திம்மராவுத்தன்குப்பம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பண்ணைகளில் விற்பனைக்காக வளர்த்து வந்த பிராய்லர் கோழிகள் கொத்து, கொத்தாக செத்து மடிந்தன. திடீரென கோழிகள் இறந்ததால், பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்தனர்.
இது பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த கோழிகளின் மாதிரிகளை ஆய்வுக்காக நாமக்கல், சென்னை உள்ளிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து இறந்த கோழிகளை பள்ளம் தோண்டி பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. மற்ற கோழிகளும் விற்பனை செய்யப்படாமல் அழிக்கப்பட்டன. புதிய கோழிகளை வாங்கி வளர்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் பறவை காய்ச்சல் பீதி மறையவில்லை. இதனால் அவர்கள் கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பாதியாக குறைந்து உள்ளது.
இது தவிர கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால், ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதுவும் விற்பனை குறைவுக்கு காரணமாக உள்ளது.
இது பற்றி கோழி இறைச்சி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், பறவை காய்ச்சல் காரணமாக இறைச்சி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்பு நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை கோழிக்கறி விற்பனையாகும்.
கடந்த 2 வாரமாக 25 கிலோ அளவுக்கு தான் விற்பனையானது. தற்போது 40 கிலோ வரை விற்பனையாகியது. மக்கள் மத்தியில் பறவை காய்ச்சல் அச்சம் குறைந்தால் தான் விற்பனை அதிகரிக்கும். மேலும் கார்த்திகை மாதம் என்பதாலும் விற்பனை சற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் முட்டை விலையும் குறைந்து வருகிறது. அசைவ உணவோடு முட்டை வாங்குவதையும் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக நுகர்வு குறைந்து வருகிறது. இதனால் முட்டை சில்லறை விலையில் ரூ.7.50 வரையிலும், மொத்த விலையில் ரூ.7.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது விலை குறைந்து நேற்று மொத்த விற்பனை கடையில் ரூ.6.40-க்கு விற்பனையானது. சில்லறை விற்பனை கடையில் ரூ.6.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.