

சென்னை,
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழந்தன. மேலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து உயிரிழந்த பறவைகளை பரிசோதித்ததில், அவை பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து, கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையோடு விலங்குகள் மற்றும் பறவைகளை கையாள வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு பின்வருமாறு;
* பறவைக் காய்ச்சல் பரவலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மனிதர்களுக்கு இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை.
* இருமல், சளி பாதிப்பு கொண்டவர்கள் சுய மருந்துகள் உட்கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவரை அணுகுவது அவசியம்
* கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* முழுமையாக சமைக்கப்படாத, சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்
* பறவை காய்ச்சல் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.
* பறவை காய்ச்சல் குறித்த கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 104-ஐ தொடர்புகொள்ளவும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.