பறவைக்காய்ச்சல் எதிரொலி: வண்டலூர் பூங்காவில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பறவைக்காய்ச்சல் எதிரொலி: வண்டலூர் பூங்காவில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
Published on: 

சென்னை,

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள இந்த பூங்கா சுமார் 1,260 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் மற்றும் முதலை, பாம்பு, ஆமை உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய பொழுதுபோக்கு மையமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. மேலும் பாதுகாப்பான வாகனங்களில் பயணித்து சிங்கம், புலி போன்ற விலங்குகளை அருகில் இருந்து பார்க்கும் வசதி உள்ளது.

பறவை காய்ச்சல்

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 என்ற வைரசின் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், பறவை காய்ச்சல் தொற்று உறுதியாகி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி மறுப்பு

இதனை தொடர்ந்து, பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் உயிர் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதனால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com