

சென்னை,
சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த பேரணியை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த சுகாதார பணியாளர்கள் மற்றும், நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-
உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இன்று திகழும் இந்தியா, தன்னுடைய திருப்புமுனையில் நிற்கிறது. நமது தேசியக் கருவுறுதிறன் விகிதம் அதாவது ஒரு பெண்ணுக்கு பிறக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 1.9 சதவீதமாக ஆகக்குறைந்து. ஈடு செய் நிலைக்கும் கீழே சென்றுவிட்டது.
நமது தமிழ்நாடோ கடந்த 1993-ம் ஆண்டிலேயே இந்தியாவிலேயே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக மக்கள்தொகை ஈடுசெய் நிலையை எட்டியது. தமிழகத்தில் தற்போது இன்று கருவுறுதிறன் விகிதம் 1.3 சதவீதம், பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 12 ஆக உள்ளது. இரண்டுமே இந்தியாவிலேயே மிகக்குறைவு. எனவே, மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது இனி தமிழ்நாட்டின் சவால் அல்ல. மக்களின் நல்வாழ்வுதான் நமது சவாலாக உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி முதல், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் வழியாக. முதல்-அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனாக நின்று, ஒரு கிராம் தங்க மோதிரத்தை அக்குழந்தையின் கைகளில் அணிவிக்க இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.