

சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்:-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது. இது அவர் இதழியல் துறையில், அரசியல் வாழ்வில், பொதுப்பணியில் தமிழ் மக்களுக்காக சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டார் என்பதற்கு அங்கீகாரமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.
அதேபோல ம.பொ.சி., பென்னிகுயிக், காலிங்கராயன், அழகு முத்துக்கோன் போன்றோரின் பிறந்தநாளில் அவர்களின் உருவச்சிலைக்கு அரசு மரியாதை செய்வதாக அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. மேலும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பெரும்பிடுகு முத்தரையர், இரட்டை மலை சீனிவாசன், வி.கே.பழனிசாமி போன்றோருக்கு உருவச்சிலையுடன் மணிமண்டபமும் அமைத்து, அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார்:-
பத்திரிகை துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளான செப்டம்பர் 27-ந்தேதி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்ப்பற்று மிக்க அரசியல்வாதி, பத்திரிகையாளர், வக்கீல் என பன்முகம் கொண்ட பண்பாளரின் பெயரை, வரலாறு நினைவுகூறும் வகையில் கூடுதல் சிறப்பளித்திருக்கும் தமிழக அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ் மண்ணில் தமிழ்த்தொண்டு ஆற்றிய மாபெரும் தமிழ் உணர்வாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரசு அங்கீகாரமானது, தமிழ் மக்களால் போற்றப்பட்டு வரவேற்கப்படுவதுடன், சான்றோர் பலரின் நினைவலைகளை சுமந்து சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் என்பது உறுதி.
வி.ஜி.பி. குழும தலைவரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம்:-
தமிழக சட்டசபையில் திருக்குறளை ஒலிக்கச்செய்து உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று தன் வாழ்வை அர்ப்பணித்து தமிழ்த்தொண்டாற்றிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி. இதற்கான நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் தமிழ் அறிஞர் ம.பொ.சி.யின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சி. தகுதி உடையவர்களுக்கு தக்க நேரத்தில் வழங்கிய இந்த அறிவிப்பு தமிழுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷமாகும்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன்:-
தமிழர் தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சி.பா.ஆதித்தனார், தமிழ் பத்திரிகை உலகின் தந்தை என்று கூறலாம். இன்று நம்பர் ஒன் நாளிதழாக உள்ள தினத்தந்தியை அவர் தொடங்கினார். அந்த காலத்திலேயே லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்தநாளை அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதேபோல ம.பொ.சி., பென்னி குயிக், காலிங்கராயன் அழகுமுத்து கோன் ஆகியோரின் பிறந்தநாட்களிலும் அரசு சார்பில் அவர்களது சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சரை பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழர் தேசிய கொற்றம் தலைவர் அ.வியனரசு:-
சொல்லாலும், செயலாலும் தமிழ் செழிக்கவும், தமிழர் வாழ்வு தழைக்கவும் தமிழ்நாடு- தமிழீழம் மீண்டெழவும் அருந்தொண்டாற்றியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். அவருக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1987-ல் சென்னையில் சிலை நிறுவி புகழாரம் சூட்டினார். சி.பா.ஆதித்தனார் பற்றி எம்.ஜி.ஆர். கூறும்போது, சட்டப்பேரவை தலைவராக பதவியேற்று நாளும் ஒரு திருக்குறளை அவை தொடங்கும் முன்னர் ஒலிக்க செய்தவர். பேரவை நடைமுறைகள் முழுவதையும் தமிழாக்கம் செய்து தமிழுக்கு அரியணை தந்தவர். அமைச்சர் பொறுப்பேற்று நிர்வாகத்திறனை வெளிப்படுத்தியவர். இன்றைக்கு நம் கண் நிற்கும் தமிழீழ தமிழர்களின் விடுதலையை 30 ஆண்டுகளுக்கு முன்பே எதிரொலித்தவர் சி.பா.ஆதித்தனார் என பெருமிதத்துடன் எடுத்துரைத்தார் என்பதோடு, சென்னையின் ஆரிஸ் ரோட்டை ஆதித்தனார் சாலை என தமிழ் பெயர் சூட்டி ஆதித்தனார் பெயரை தமிழ் மண்ணில் நிலைநாட்டினார். எம்.ஜி.ஆர். வழி வந்த இன்றைய அ.தி.மு.க. அரசு ஆதித்தனார் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்திருப்பது உலக தமிழர்களின் மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு:-
பாமரரும் தமிழ் படிக்கவேண்டும், பைந்தமிழ் உலகெங்கும் பரவி நிற்கவேண்டும் என்று உழைத்து உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற உன்னத கொள்கை முழக்கத்தோடு வாழ்ந்த ஒப்பற்ற தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்ததினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
தெட்சண மாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழாவை, அரசு விழாவாக கொண்டாடுவது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவர். அவர் ஆரம்பித்த தினத்தந்தி, மாலைமுரசு தமிழ் நாளிதழ்கள் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. படிக்காத பாமரனையும் தமிழ் படிக்க வைக்கும் அளவுக்கு பெயர்பெற்று விளங்கியது. பட்டிதொட்டி எங்கும் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் பரவ செய்த சி.பா.ஆதித்தனார், தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்கள் நடத்தி சிறைக்கும் சென்றுள்ளார்.
தமிழக சட்டசபை சபா நாயகராக சி.பா.ஆதித்தனார் பணியாற்றிய காலத்தில்தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும். அதுமட்டுமின்றி கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
இவ்வாறு தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்து மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது, எங்கள் சமுதாய மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு தெட்சண மாற நாடார் சங்கம் சார்பிலும், நாடார் சமுதாய மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.