

வேலூர்,
வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு மேல் அரசம்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் குமரேசன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் அவ்வபோது சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
பெண்ணுக்கு போலீஸ் உடை அணிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்து வந்தது. நேற்று குமரேசனுக்கு பிறந்தநாள் என்பதால் போலீஸ் உடையணிந்து கேக் வெட்ட வேண்டும் என அவரிடம் தெரிவித்தார்.
குமரேசன் கடந்த வாரம் டி.எஸ்.பி உடைக்கான துணிகளை வாங்கி கொடுத்தார்.
நேற்று முன் தினம் குமரேசன் சென்னையில் இருந்து கள்ளக்காதலியை பார்க்க ஆவலாக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று காலை இளம்பெண் டிஎஸ்பி உடை அணிந்து கொண்டு மினுக்குடன் காதலனுடன் வேலூருக்கு வந்தார். பிறந்தநாள் பரிசாக கள்ளக்காதலனின் ஆசையை நிறைவேற்றினார்.
வேலூரில் உள்ள பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கி கொண்டனர். பின்னர் வேலூர் கோட்டைக்கு வந்த இருவரும் ஹேப்பி பர்த் டே டூ யூ என்ற பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடியபடி கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். இருவரும் மாறி மாறி கேக் வெட்டி ஊட்டிக்கொண்டிருந்தனர். அப்போது வேலூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்ணிடம் நீங்கள் டிஎஸ்பி யா? நாங்கள் உங்களை இதுவரை பார்த்தது இல்லையே. நீங்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எந்த ஊரில் டிஎஸ்பியாக வேலை செய்கிறீர்கள் என விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீஸ் பணியில் இல்லாமல் உடை அணிந்து பொதுவெளியில் கேக் வெட்டியதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபோல் தவறு செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
பெண் ஒருவர் டிஎஸ்பி உடைய அணிந்து கேக் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.