

சேலம்,
ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை, பாலமேடு பகுதிகளில் காட்டெருமைகள் மீண்டும் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே வேதனையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பாலமேடு உள்கோம்பை, வத்தியூர், மோளக்கரட்டூர், காஞ்சேரி ஆகிய கிராமங்கள் ஏற்காடு மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ளன. இப்பகுதி விவசாயிகள் தங்களது தோட்டங்களில் வாழை, மஞ்சள், சாமந்தி, பாக்கு, சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் கால்நடை தீவனப்புல் ஆகியவற்றைப் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டேனிஷ்பேட்டை அடிவாரம் பாலமேடு உள்கோம்பை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் முகாமிட்டுள்ளன. இவை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைத் தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன.
நேற்று அதிகாலையும் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதுகுறித்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
"டேனிஷ்பேட்டை அடிவாரம் பாலமேடு உள்கோம்பை பகுதியில் காட்டெருமைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் தோட்டத்திற்கு செல்லவே அச்சமாக உள்ளது. காட்டெருமைகளால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்து எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்டியடிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர்கள் கூறினர்.