கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழகம் வருகை

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
அதேவேளை, கரூர் கூட்ட நெரிசல் குறித்து விரிவான விசாரணை நடத்த நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க பாஜக குழு அமைத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனைபடி 8 பேர் கொண்ட பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான இந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி,ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று தமிழகம் வந்துள்ளது. கோவை விமான நிலையம் வந்த பாஜக எம்.பி.க்கள் குழுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கியுள்ள ஹேமமாலினி எம்.பி. பதில் அளித்தார்.
செய்தியாளர்களிடம் ஹேமமாலினி கூறியதாவது,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுவாக வந்துள்ளோம். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
கூட்ட நெரிசல் நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்ய உள்ளோம். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க உள்ளோம். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இது தொடர்பாக அறிக்கையை பாஜக தலைமைக்கு தாக்கல் செய்ய உள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.






