

கரூர்,
கரூர் வந்த தம்பிதுரை அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தவறான கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசை தொடர்பு கொண்டு ஆட்சியை கவிழ்க்க திமுக திட்டம் தீட்டி வருகிறது.
சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது. ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சோதனைகள் நடப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றனர்
இவ்வாறு தம்பிதுரை எம்.பி கூறினார்.
முன்னதாக திருச்சியில் பேசிய தம்பிதுரை எம்.பி, அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. திமுகவிற்கும் பாரதிய ஜனதாவிற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணியே அவர்களுக்கு இடையேதான், எங்களிடம் இல்லை எனக் கூறினார்