

சென்னை,
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவன் நாயகம், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, சரஸ்வதி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
2 மாதங்களுக்கு முன்பே தயார்
கூட்டத்தின் முடிவில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே தயாராகி வருகிறோம். சென்னை உள்பட 4 மாநகராட்சிகளுக்கான விருப்பமனு நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. இன்று (நேற்று) முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்காக நாங்கள் ஏற்கனவே தயாராக இருந்த நிலையில் நாளை (இன்று) அல்லது நாளை மறுநாள் (நாளை) தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட இருக்கிறார்கள்.
பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள், மண்டல பொறுப்பாளர்கள் நேர்காணல் நடத்தி அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனடியாக வேட்பாளர்களை அறிவிப்பார். அதைத்தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் 31-ந்தேதிக்கு பின்னர் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
31-ந்தேதி வேட்பாளர் பட்டியல்
அதைத்தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்கிறதா? கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரம் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அண்ணாமலை பேசி முடிவெடுப்பார். எது எப்படி ஆனாலும் வேட்பாளர் பட்டியல் 31-ந்தேதிக்குள் வெளியாகும் என்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.