பா.ஜ.க. கவுன்சிலர் உள்பட 37 பேர் கைது

திண்டுக்கல்லில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. கவுன்சிலர் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க. கவுன்சிலர் உள்பட 37 பேர் கைது
Published on

உண்ணாவிரதம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தனபாலன். இவர் திண்டுக்கல் மாநகராட்சியின் 14-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இந்த 14-வது வார்டில் விவேகானந்தா நகர், அண்ணா நகர், சுப்ரீம் நகர், வ.உ.சி. நகர், ஆர்த்தி தியேட்டர் சாலை, டெலிபோன் காலனி, திருச்சி சாலை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிகளில் குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, தெருவிளக்கு ஆகிய வசதிகளுக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் நிறைவு பெறவில்லை என்று கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக கவுன்சிலர் தனபாலன் அறிவித்தார். அதற்காக அனுமதி கேட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தார். இதை தொடர்ந்து நேற்று விவேகானந்தா நகரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர் தனபாலன் தலைமையில் 14-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. கவுன்சிலர் கைது

இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சுவாமிநாதன், தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததோடு, உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அப்போது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசாரும் அங்கு வந்தனர். மேலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. கவுன்சிலர் தனபாலன் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு போலீசார் கொடுத்த உணவையும் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com