இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் உரிமை இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் உரிமை இல்லை என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு மேற்கொண்ட துணிச்சலான முயற்சி - மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும். இது இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் தார்மீக உரிமை இல்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை, வரலாற்றில் தமிழகமும் திமுகவும் இத்தகைய அடக்குமுறை மேலோட்டங்களுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன. இந்தித் திணிப்புப் புயலை நாம் இதற்கு முன்பு எதிர்கொண்டோம், தளராத உறுதியுடன் மீண்டும் அதைச் செய்வோம்.

இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com