ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசை சந்தித்ததில் பா.ஜ.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி

கோப்புப்படம்
ஆடிட்டர் குருமூர்த்தி தனிப்பட்ட முறையில் பா.ம.க. தலைவர் ராமதாசை சந்தித்துள்ளார் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அதில் ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி என்பது வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்ததே உயிரிழப்பிற்கு காரணம்.
பா.ம.க.வில் நடக்கும் விவகாரம் அவர்களின் உட்கட்சி விவகாரம். அதை பேசுவது நாகரிகமாக இருக்காது. அப்பா, மகனுக்கு இடையே இருக்கும் சொந்த பிரச்சினையை அவர்களே பேசி தீர்க்க வேண்டும். ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் பா.ம.க. தலைவர் ராமதாசை சந்தித்துள்ளனர். அதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பு இல்லை.
சமாதானம் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும். அனைவரும் ஓரணியில் இருந்து தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காக த.வெ.க. தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.