நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது - இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்

நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது - இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்
Published on

முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒரு மணி நேரம் கூட நடத்த முடியவில்லை. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜனதா அரசு நிராகரிக்கிறது. அதானியின் ஏஜென்டாக பிரதமர் மோடி செயல்படுகிறார்.

அண்ணாமலை கருத்து நல்லது

அமலாக்கத் துறையை அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதா பயன்படுத்தி வருகிறது. ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய 24 மணி நேரத்தில் அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது ஜனநாயகம் காணாமல் போய் விட்டது. ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது. தற்போது ராகுல்காந்தியின் பக்கம் நாடே உள்ளது. இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரியர் தொகையையும் சேர்த்து ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியிருப்பது நல்ல கருத்து தான்.

மாற்று ஆட்சி அமையும்

பிரதமர் மோடி தேர்தல் சமயத்தில் ஒரு நபரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். தற்போது வாக்குறுதி அளித்து 9 வருடம் ஆகிறது. இதனையும் அரியர் தொகையுடன் சேர்ந்து வழங்க மத்திய அரசிடம் அண்ணாமலை அறிவுறுத்த வேண்டும்.

2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து மாற்று ஆட்சி அமையும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கடுமையான நிதி நெருக்கடி இருந்தது. அந்த நிதி நெருக்கடியை சமாளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது என்பது மாநில, மத்திய அரசு இணைந்து தான் செயல்படுத்த முடியும்.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதனை அவர் நிறைவேற்றவில்லை. தினமும் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். எனவே கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com