தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுகிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுகிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுகிறது: அண்ணாமலை
Published on

நிவாரண பொருட்கள்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பா.ஜனதா கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை கொடியசைத்து லாரியில் அனுப்பி வைத்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசை பா.ஜனதா மட்டுமல்ல, அ.தி.மு.க.வும் விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூட தி.மு.க. அரசை கண்டித்து அறிக்கை கொடுத்து இருந்தார். தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுகிறது. யார் எதிர்க்கட்சி என்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இடையே போட்டி இல்லை. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.

கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான உறவு

நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான உறவை வைத்து இருக்கிறோம். அ.தி.மு.க. தமிழகத்தில் இருந்து கருத்துகளை முன் வைக்கிறது. இந்தியா சார்பில் இருந்து வரும்போது பா.ஜனதா கருத்து தெரிவிக்கிறது. சசிகலா வருகை குறித்து நான் கருத்து எதும் கூற முடியாது. அரசியலுக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம், போகலாம். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்கின்றனர். சில இடங்களில் நாங்கள் சொல்வதை முதல்-அமைச்சர் கேட்டுக்கொள்கின்றார். உதாரணமாக கோவில்கள் திறப்பது, ஆவின் டெண்டர் உள்ளிட்டவற்றில் எங்களது கருத்துகளை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டு உள்ளார். தமிழகத்தில் தி.மு.க. பேசுவது எல்லாம் பா.ஜனதாவை எதிர்த்துதான். தி.மு.க. மற்றும் பா.ஜனதா இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடக்கிறது.

ஆதாரம்

மின் வாரியத்தில் ஊழல் நடக்க போகின்றது. அதை தான் சுட்டிக்காட்டினோம். கொடுத்த ஆதாரங்களுக்கு இதுவரை பதில் இல்லை. கண்ணாடி மாளிகையில் இருந்து அமைச்சர் கல் எறிகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி வாயில் இருந்தே உண்மை வெளிவரும். ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை. மின்துறை மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஜி.கே.நாகராஜ், அரசு தொடர்பு பிரிவு செயலாளர் கணபதி என்.ஜான்சன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com