

சென்னை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் 08.05.2026 ஆம் தேதி இன்று (வெள்ளிக்கிழமை)மாலை 3.00 மணி சென்னை சூளைமேடு, அமீர் ஜான் தெருவில் உள்ள ஏஐபிஇயூ அலுவலகம் தாரக் இல்லத்தில் தோழர் கே.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் மதவெறுப்பு அரசியல் சக்திகளை உறுதிபட தோற்கடித்துள்ள தமிழ்நாடு வாக்காளர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு பாராட்டுகிறது. போட்டியிட்ட அணிகளில் மிக அதிகமான இடங்களை தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் வழங்கியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதிக்கிறது.
அதிக இடங்களைப் பெற்ற தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு பதிலாக ஆர்எஸ்எஸ், பாஜக ஒன்றிய அரசின் அரசியல் கருவியாக செயல்படும் ஆளுநர் அவர்கள் தன்னிடம் தனிப்பெரும்பான்மையைக் கடிதம் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழ்நாட்டில் அமல்படுத்தி புறவழியாக பாஜகவின் ஆட்சியை திணிக்க இதன் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கு இடமளிக்காத வகையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்திட வெளியிலிருந்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.