

சென்னை,
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்குவந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா வெற்றிப்பெற்றதை அடுத்து அங்கு வன்முறை சம்பவங்கள் வெடித்து உள்ளது. திரிபுராவில் லெனின் சிலைகளும் உடைக்கப்படுகிறது.
இதனை குறிப்பிட்டு தன்னுடைய முகநூல் பதிவில் கருத்து வெளியிட்ட பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்) என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து வெளியிட்ட எச்.ராஜாவுக்கு ஜெ.தீபா தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார்.
ஜெ.தீபா தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர்... சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை.. இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன்.. என பதிவிட்டு உள்ளார். ஜெ.தீபாவின் பதிவை பகிர்ந்துவரும் பலரும் தங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.