தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல்: 7 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல் தொடர்பாக, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் வ.உ.சி. பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பாஜக கட்சியினர் வந்தனர். அப்போது மக்கள் ஒற்றுமை பிரசாரப் பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியூ, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வ.உ.சி. சிலை முன்பாக தங்கள் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் பேச்சைத் தொடங்கினர்.
அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் தரக்குறைவாக பேசுயதாகக் கூறி, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் வெகுநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினரும் அங்கு இல்லாததால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் ஆனது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியே தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் பாஜக மேற்கு மண்டல முன்னாள் பொதுச் செயலாளர் சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில் சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து உட்பட 3 பேர் மீதும், சிஐடியூ பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகிகள் சொக்கலிங்கம், சுந்தர், சிவராமன் உள்பட 4 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வி 294பி, 323 ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






