சொந்த கட்சி நிர்வாகியின் வீட்டை துவம்சம் செய்த பாஜகவினர் - 5 பேர் கைது


சொந்த கட்சி நிர்வாகியின் வீட்டை துவம்சம் செய்த பாஜகவினர் - 5 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2025 10:22 AM IST (Updated: 27 Dec 2025 10:30 AM IST)
t-max-icont-min-icon

பாஜக நிர்வாகியை 6 பேர் கொண்ட கும்பல் தாக்க முயன்றது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள பரத்வாஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (வயது 50) இவர் பா. ஜனதா கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவையொட்டி ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு வரதராஜபுரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்க முயன்று செல்வமணியின் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டது.

சுதாரித்து கொண்ட செல்வமணி அவர்களிடமிருந்து தப்பி சாமர்த்தியமாக உள்ளே ஓடி வீட்டின் கதவை சாத்தி கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் வீட்டின் கதவை உடைக்க முயன்றது. முடியாததால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் அதை உடைத்து சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அப்போது செல்வமணியின் மனைவி, மகள் மற்றும் மகன் என குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்குள் இருந்தனர். இது குறித்து செல்வமணி மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ், யோகேஸ்வரன், சஞ்சய், தினேஷ்குமார் மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக பூத் ஏஜன்ட்களுக்கு பாஜக மேலிடம் அளித்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு எனவும் பாஜக மாநில துணைத் தலைவர் அமர்நாத் சொல்லித்தான் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story