

புதுச்சேரி, மே.6-
மேற்கு வங்காள வன்முறையை கண்டித்து புதுவையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், மம்தா பானர்ஜியின் உருவப்படத்தை கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மேற்குவங்கத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கண்டித்தும் புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் நேற்று காலை கல்வித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம், ஜான்குமார், ஏம்பலம்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தீ வைத்து கொளுத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் அணியினர் திடீரென ஊர்வலமாக சென்று இந்திராகாந்தி சிலை அருகே மம்தா பானர்ஜியின் உருவபடத்தை தீ வைத்து கொளுத்தினர். மேலும் செருப்பால் அடித்து அவமரியாதை செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால்
காரைக்காலில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் துரை.சேனாதிபதி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் அருள்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் மணிகண்டன், செந்திலதிபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மம்தா பானர்ஜியின் உருவப்படத்தை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.