இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வேலூரில் நடந்த பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
Published on

வேலூர்,

வேலூர் அருகே அரப்பாக்கத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது.

இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், கட்சி நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., எச்.ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரத ரத்னா

கிராமத்தில் பிறந்து அரசு பணியில் இருந்து பின்னர் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்த இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. அரசு ஒத்துழையாமை செய்து வருவது கண்டிக்கத்தக்கது. மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்ததாக கூறுவது ஏமாற்றும் வேலையாகும். கச்சத்தீவை மீட்க மேற்கொள்ளும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக தமிழில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சியடையாமல் தோல்வி அடைந்துள்ளனர். இது தமிழுக்கு பெரும் அவமானம்.

தமிழக அரசின் செயல்பாடுகள் சரியானவையாக இல்லை. தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, அபின், மதுவகைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com